×

தங்கம் விலை உயர்ந்துவிட்ட நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுமா? இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

சென்னை: தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: ஒரு பவுன் தங்க நகை ரூ.51 ஆயிரமாக உயர்ந்துவிட்ட சூழ்நிலையில், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல அனுமதி மறுப்பது தொடர்பாக பல்வேறு நகை கடை உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை பரிசீலிக்க, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். கோவையில் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு, பாஜ வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுத்த வீடியோ, சி-விஜில் மூலம் வரவில்லை.

அந்த வீடியோ இப்போது உள்ளதா, பழைய வீடியோவா, எந்த இடம் என்ற தகவல் இல்லை. அது குறித்து விரிவாக விசாரிக்க கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில், பதிவுபெற்ற அரசியல் கட்சி வேட்பாளருக்கு, முந்தைய தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற்றது, இதே சின்னம் பயன்படுத்தப்பட்டதா என்பதன் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். ஒரே சின்னத்தை மூன்று அல்லது 4 பேர் கேட்டிருந்தால், பதிவு பெற்ற அரசியல் கட்சி வேட்பாளருக்கு குறிப்பிட்ட அந்த சின்னத்தை ஒதுக்க சம்மதமா? என்று மற்ற சுயேட்சை வேட்பாளர்களிடம், சின்னம் ஒதுக்கும் அதிகாரி கோரிக்கை எழுப்புவார். அதை அவர்கள் ஏற்க மறுத்தால் குலுக்கல் மூலம் சின்னம் ஒதுக்கப்படும். தபால் ஓட்டுக்கள் அச்சிடும் பணி விரைவில் தொடங்கும். தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடர்ச்சியாக துணை ராணுவம் தமிழகம் வரும். 120 வயதுக்கு மேல் தமிழகத்தில் 55 பேர் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. இதுபற்றி அவர்கள் வீடுகளுக்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரிதான் உறுதி செய்வார்.

முதல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டோ இடம் பெறும். கூடுதல் இயந்திரங்களில் 16 வேட்பாளர்கள் பெயர் இடம்பெறும். ஒரு தொகுதியில் 15 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் அதற்கேற்ப 3 அல்லது 4 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொறுத்தப்படும். அவ்வாறான இயந்திரங்களில் நோட்டா கடைசியாக இடம் பெறும். இவற்றுக்கு கட்டுப்பாட்டு இயந்திரம் ஒன்று போதுமானதாகும். கடந்த மாதம் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் புகைப்பட அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

The post தங்கம் விலை உயர்ந்துவிட்ட நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுமா? இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commission of India ,CHENNAI ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Satyapratha Saku ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்